.webp)
Colombo (News 1st) காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் தங்கியுள்ளவர்களையும் தற்காலிகக் கூடாரங்களையும் பொலிஸார் அகற்றுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 04 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டன.
சோபித ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தமது சேவை பெறுநர்கள், காலி முகத்திடலிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக, மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனால் குறித்த மனுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டரீதியான உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாரு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என கோட்டை பொலிஸார் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவும், நகர அபிவிருத்தி அதிகார சபை சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் மன்றுக்கு அறிவித்தனர்.
அதற்கமைய, குறித்த மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், ஆரம்பத்திலேயே மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் போராட்டக்களத்திலிருந்து வௌியேறுமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவ்வாறான அறிவித்தலை விடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என தெரிவித்த மனுதாரர்கள், குறித்த அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மீகஹவத்த காஷியப்ப தேரர், இரேஷ் அல்போன்ஸ், அசங்க அபேரத்ன மற்றும் லஹிரு அன்ரன் மதுஷான் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.