.webp)
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதால், தோட்டத்துறை நெருக்கடிக்குள்ளாகும் என அறிவித்து, அக்கரபத்தனை, எல்பிட்டிய உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற பரிசீலனையின் போது, பெருந்தோட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.