ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

by Bella Dalima 09-08-2022 | 7:43 PM

Colombo (News 1st) 2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமையூடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை பிரதிவாதிகளுக்கு வௌிநாட்டு பயணத் தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பிரதிவாதிகள் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல இதன்போது மேன்முறையீட்டு நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார். 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் காஜா மொஹிதீன் மொஹமட் ஷாகிர் ஆகிய பிரதிவாதிகளின் வௌிநாட்டு கடவுச்சீட்டுகளை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் பிரதிவாதிகளுக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு முன்னர், செப்டம்பர் 30 ஆம் திகதி முன் விளக்க மாநாட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, பிரதிவாதிகள் மன்றில் இன்று ஆஜரான போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியதுடன், சதொச நிறுவனத்தினூடாக அவர்களுக்கான சம்பளத்தை வழங்கி அரசுக்கு 11, 93,000 ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.