அடக்குமுறைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Bella Dalima 09-08-2022 | 8:48 PM

Colombo (News 1st) அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி தொழிற்சங்க இணைப்பு மத்திய நிலையமும்  ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் இணைந்து ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் இன்று ஏற்பாடு செய்திருந்தன.

சர்வ மதத் தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் இணைந்து விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இவர்கள் பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை சென்றனர்.

பின்னர் அவர்கள் 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துடன்,  மக்கள் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் இலங்கை பிரஜைகளினால் ரணில் - ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான குடியுரிமை ஆணையினையும் வௌியிட்டனர். 

இதனிடையே, போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. 

அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.