.webp)
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பரிந்துரை கிடைக்கும் வரை மஸ்கெலியா - நல்லதண்ணி வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ஹற்றன் - நுவரெலியா வீதியிலும் ஒருவழி போக்குவரத்து மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்ஜித் அழககோன் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களிலும் மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.