சிறுத்தையின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு

சிறுத்தையின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் உத்தரவு

by Rajalingam Thrisanno 08-08-2022 | 6:00 PM

ஹற்றன் - வனராஜா தோட்டப் பகுதியில் மரத்தில் தொங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்த சிறுத்தையின் மரணம் தொடர்பாக துரித விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக சிறுத்தை உயிரிழந்திருப்பதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக மேலதிக செயலாளரை உள்ளடக்கிய குழுவொன்றை இன்று ஹற்றன் சமர்ஹில் தோட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் சந்த்ரா ஹேரத் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் வனராஜா தோட்டத்தின் சமர்ஹில் பிரிவில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய சிறுத்தை பொறியிலிருந்து தப்பிய போதிலும் கம்பியொன்று வயிற்றில் இறுகிய நிலையில் சுமார் 50 அடி உயரமான மரத்தில் ஏறி 6 மணித்தியாலங்களுக்கு மேலாக உயிருக்கு போராடியது. 

நீண்ட நேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திவிட்டு பின்னர் மரத்தை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.

மரத்தை வெட்டியவுடன் கீழே வீழ்ந்த சிறுத்தை சில நிமிடங்களின் பின்னர் உயிரிழந்தது.