மழையுடனான வானிலையால் மலையக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு

மழையுடனான வானிலையால் மலையக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு

மழையுடனான வானிலையால் மலையக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு

எழுத்தாளர் Rajalingam Thrisanno

07 Aug, 2022 | 8:24 pm

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையுடன் கூடிய வானிலையால் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் அனர்த்தங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியின் நானுஓயா – டெஸ்போட் பிரதேசத்தில் வீதி தாழிறங்கியுள்ளது.

இதனால் ஒரு வழிப்பாதையூடாக மாத்திரம் வாகனங்கள் பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் வீதியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த பாதையை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய வானிலையால் ஹற்றன் மவுசாக்கலை பகுதியிலுள்ள தொடர் தோட்ட  குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் குடியிருப்பின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.

10 அறைகளைக் கொண்ட இந்த தொடர் தோட்ட குடியிருப்பின் சமையலறைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மாத்தளை எல்கடுவ மஹாதென்ன பிரதேசத்திலுள்ள தோட்ட குடியிருப்பொன்றின் மீது கடந்த 4 ஆம் திகதி மரம் முறிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 06 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக மண்டபமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்றும் இரவு நேர தபால் ரயில் உள்ளிட்ட 03 கடுகதி ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியது.

தற்போது நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பில் நாளை ஆராய்ந்து அடுத்தகட்ட தீர்மானம் எடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்தது. 

இதேவேளை, நுவரெலியா – ஹற்றன் கிரிமெட்டிய வீதியூடான ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வீதியின் ஒரு பகுதியில் நிலம் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதால், அந்த பகுதியூடாக ஒருவழிப் போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால் குறித்த பகுதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும் வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்குமென மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மஸ்கெலியா – நல்லத்தண்ணி வீதியும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்