ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐ.நா செயலாளர் நாயகம் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐ.நா செயலாளர் நாயகம் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐ.நா செயலாளர் நாயகம் வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2022 | 5:24 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் (António Guterres) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது முகங்கொடுத்துள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு தேவையான சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் முக்கியமானதாக அமைந்துள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய திட்டத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சியை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியின் போது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிதல், சட்டவாட்சி, அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்தல் என்பனவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் துரித மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாக செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்காகவும் சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்