கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

by Bella Dalima 05-08-2022 | 5:11 PM

Colombo (News 1st) ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வௌ்ளிக்கிழமை வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகளை வழங்கியோ அல்லது இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியும் என அறிக்கை ஒன்றினூடாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில் மாத்திரம் பாடசாலைகளை திறப்பதற்கு ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், எதிர்வரும் வியாழக்கிழமை பொது விடுமுறை என்பதால், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் மாத்திரம் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது. 

போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளில் மாத்திரம் அதிபர், ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், வௌ்ளிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் , உரிய கால அட்டவணையை தயாரித்து செயற்படுத்துதல் அவசியம் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.