தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை

இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

by Bella Dalima 05-08-2022 | 7:03 PM

Colombo (News 1st) தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்விற்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக அனைத்து சக்திகளும் இணைந்த கலந்துரையாடல் ஊடாக நீண்ட கால, குறுகிய கால செயற்றிட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும் எனவும் குறுகிய அரசியல் இலாப நோக்கங்களைக் கைவிட்டு பரந்துபட்ட தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக சிந்திக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவற்றை முதன்மைப்படுத்தி அதனூடாக இயலுமான அதிகபட்ச அதிகாரங்களை இடைக்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான உபாயங்கள் வகுக்கப்படவேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்காலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு, இறுதி இலட்சியத்தை நோக்கி முன்னேறுவோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.