​24 வருட வரலாற்றை புதுப்பித்த யுபுன் அபேகோன்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்

by Rajalingam Thrisanno 04-08-2022 | 3:36 PM
இலங்கையின் யுபுன் அபேகோன் ஆசியாவின் அதிகவே மனிதராக பதிவாகியுள்ளார். பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றதன் மூலம் அவருக்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது. பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று(04) அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு தகுதிபெற்ற ஒரே ஆசிய வீரராக யுபுன் அபேகோன் களமிறங்கினார். போட்டியை 10.14 விநாடிகளில் பூர்த்தி செய்த அவர் மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டிகளில் 24 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வென்ற முதல் பதக்கமாகும். போட்டியை 10.02 விநாடிகளில் கடந்த கென்யாவின் பர்டினன்ட் ஓமன்யாலா தங்கப்பதக்கத்தை சுவீகரிக்க தென் ஆபிரிக்காவின் அகானி சிம்பினி  (10.13 விநாடிகள்) வௌ்ளிப்பதக்கத்தை வென்றார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்பது எமது இவ்வருட இலக்குகளில் ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஓடுவதற்கு முன்பே எனது காலப்பெறுதியை அடைந்திருந்தேன். ஆகவே, போட்டியில் நான் அழுத்தமின்றி பங்குபற்றினேன். சிறந்த காலப்பெறுதியை அடைந்திருப்பதால் தைரியமாக ஓடும்படி எனது பயிற்றுநர் எனக்கு கூறினார். போட்டியில் வெண்கலப்பதக்கம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
என்று போட்டியின் பின்னர் யுபுன் அபேகோன் தெரிவித்தார். இதேவேளை, பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பரா பரிதி வட்டம் எறிதலில் பாலித பண்டார வௌ்ளிப்பதக்கம் வென்றார். எவ் 42 - 44 பிரிவில் பரா பரிதி வட்டம் எறிதலில் பங்கேற்ற அவர் 44.02 மீட்டர் தூரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி வௌ்ளப்பதக்கத்திற்கு பாத்திரமானார். பொதுநலவாய பரா விளையாட்டு விழாவில் இலங்கையர் ஒருவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.