தாய்வானை ஒருபோதும் கைவிடப்போவதில்லை: அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி வாக்குறுதி

தாய்வானை ஒருபோதும் கைவிடப்போவதில்லை: அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி வாக்குறுதி

தாய்வானை ஒருபோதும் கைவிடப்போவதில்லை: அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2022 | 8:20 pm

Taiwan: சர்ச்சைக்குரிய விஜயத்தின் பின்னர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி,  தாய்வானிலிருந்து இன்று புறப்பட்டுச்சென்றார்.

25 ஆண்டுகளின் பின்னர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொள்ளும் உயர் அதிகாரத்திலுள்ள சிரேஷ்ட அமெரிக்க அரசியல்வாதியாக பதிவாகிய அவர், இந்த விஜயத்தை நிறைவு செய்துள்ளார்.

தாய்வான் தலைநகர் Taipei-இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில், அந்நாட்டு ஜனாதிபதி Tsai Ing-wen-ஐ நான்ஸி பெலோசி சந்தித்துள்ளார்.

தாய்வானுக்கு அமெரிக்கா வழங்கும்  எதிர்பார்ப்புகளற்ற ஒத்துழைப்புகளுக்கு தாய்வான் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

தாய்வானை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இதன்போது உறுதியளித்துள்ளார்.

தாய்வான் ஜனாதிபதியை சந்திக்க முன்னர், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, தாய்வானின் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பலர் அவரை சந்தித்தனர்.

தாய்வானின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது, அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என இந்த சந்திப்பிற்கு முன்னர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

நான்ஸி பெலோசியின் இந்த விஜயத்தின் பின்னர், சீனா தாய்வான் மீது பல தடைகளை விதித்துள்ளது.

அதற்கமைய, தாய்வானிலிருந்து சீனாவிற்கு முன்னெடுக்கப்படும் மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்வானின் பழங்கள் மற்றும் மீன் இறக்குமதி மீது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தாய்வான் தன்னை சுயாதீன அரசாகக் கருதும் நிலையில், சீனா தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிராந்தியமாகவே கருதுகின்றது.

இந்த நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு 21 சீன விமானங்கள் தற்போது தாய்வானின் விமான வலயத்திற்குள் பிரவேசித்துள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை எல்லையில் விசேட போர் ஒத்திகை நடைபெறுமென சீனா அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதனால் குறித்த வலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டாமென ஏனைய தரப்பினருக்கு சீனா அறிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா தனது பிரதான 03 கப்பல்களை தாய்வானின் மேற்கு கடல் பிராந்தியத்தில் நங்கூரமிட்டுள்ளது.

USS ரொனால்ட் ரீகன், ஆபிரகாம் லிங்கன் மற்றும் USS Tripoli ஆகிய கப்பல்களே இவ்வாறு நங்கூரமிடப்பட்டுள்ளன.

இதற்கு இணையாக சீனாவும் தனது யுத்த கப்பலை தென்சீன கடல் எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரின் விஜயம், பிராந்தியத்தின் நிலையான தன்மைக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கும் சீனா, நெருப்புடன் விளையாட வேண்டாமெனவும் நெருப்பினாலேயே அழியும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்வான் ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தை இலக்குவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடங்களாக இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தாய்வானின் வௌிவிவகார அமைச்சின் இணையத்தள பக்கமும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் சீனாவால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்