யுபுனின் பதக்க கனவு பிரகாசம்

100 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதிக்கு தகுதிபெற்ற யுபுன் அபேகோன்

by Rajalingam Thrisanno 02-08-2022 | 8:45 PM

தெற்காசியாவின் அதிவேக வீரர் எனும் பெருமைக்குறிய இலங்கையின் யுபுன் அபேகோன் பொதுநலவாய விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். 

பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் இன்று பிற்பகல் களமிறங்கினர். 

இலங்கையின் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புமிக்க வீரராகத் திகழும் யுபுன் அபேகோன் ஆடவருக்கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்டியில் பங்குபற்றினார். 

போட்டியை முதல் வீரராகக் கடந்த அவர் அதற்காக 10 தசம் 06 செக்கன்களை எடுத்துக்கொண்டார். 

இது ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் இந்தமுறை முதல் சுற்றில் வீரர் ஒருவரால் வௌிப்படுத்தப்பட்ட அதிசிறந்த காலப்பெறுதியாகும். 

யுபுன் அபேகோன் பங்குபற்றும் ஆடவருக்கான 100 மீற்றர் அரைஇறுதிப் போட்டி நாளை(03) இலங்கை நேரப்படி இரவு 11.40 அளவில் நடைபெறவுள்ளது. 

முதல் சுற்று 8 போட்டிகளைக் கொண்டது என்பதுடன் யுபுன் ஆறாவது முதல் சுற்றுப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இந்தப் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய யுபுன் அபேகோன் மிக இலகுவான முன்னிலைப் பெற்றார். 

ட்ரினிடாட்டின் பெஞ்சமின் கீஓன் Kion BENJAMIN (10.34 செக்கன்கள்) இரண்டாமிடத்தையும், நைஜீரியாவின் ஒகேனிரூம் ஓகி Godson Oke OGHENEBRUME (10.36) மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  யுபுன் அபேகோன், தமது முதல் இலக்கான அரைஇறுதிக்கு முன்னேறும் இலட்சியத்தை அடைந்துவிட்டதாகவும் மிகுதியை அரைஇறுதியில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.