தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 15 வரை விளக்கமறியல்

தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 15 வரை விளக்கமறியல்

by Bella Dalima 01-08-2022 | 9:17 PM

Colombo (News 1st) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தானிஸ் அலி என்பவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  டானிஸ் அலிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி சந்தேகநபரின் பிணை கோரிக்கை தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை இன்று முற்பகல் இடம்பெற்ற போது, சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் மன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதன்போது, சந்தேகநபரை நாளைய தினம் மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

பொலிஸார் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பிணை கோரிக்கை தொடர்பான கட்டளையை அன்றைய தினம் பிறப்பிப்பதாகவும் அறிவித்துள்ளார்.