3 நாட்களுக்கு பாடசாலைகள் திறப்பு

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த கல்வி அமைச்சு தீர்மானம்

by Bella Dalima 30-07-2022 | 5:15 PM

Colombo (News 1st) ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான வாரத்தில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 03 நாட்களுக்கு திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய இரு நாட்களிலும் அதாவது புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஒன்லைன் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

கல்வி அமைச்சரின் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பாடசாலைகளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன் வலயக் கல்வி பணிப்பாளர்களின் அனுமதியுடன் புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளிலும் திறக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் 03 நாட்களேனும் பாடசாலைக்கு சமூகமளித்து கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் கால அட்டவணையை தயார்ப்படுத்தல் வேண்டுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.