.webp)
Colombo (News 1st) அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12 பேர் யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு தயாராகவிருந்த 8 ஆண்களும் 3 பெண்களும் 7 வயதான சிறுவனுமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், பருத்தித்துறை, சாவகச்சேரி,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
குறித்த 12 பேரும் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக வீடொன்றில் தங்கியிருந்ததுடன், அந்த வீட்டு உரிமையாளர்களும் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, வீட்டிலிருந்த 3 சிறுவர்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.