44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பம்

மாமல்லபுரத்தில்  44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பம்

by Bella Dalima 29-07-2022 | 5:00 PM

இந்தியா: தமிழகத்தின் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேரு  விளையாட்டரங்கில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி (44th Chess Olympiad 2022) நேற்று (28) ஆரம்பமானது.

இதில் 189 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 

ரூ.100 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டு, போட்டிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் R.N.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று  நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். 

அதிதிகளின் வருகையை அடுத்து, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வின் போது பிரதமர் மோடி தமது உரையை 'வணக்கம்' என தமிழில் கூறி ஆரம்பித்தார்.

செஸ் போட்டிக்கும் தமிழகத்திற்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது என பிரதமர் இதன்போது பெருமிதத்துடன் தெரிவித்தார்.

''விருந்தினர்களை கடவுளாக மதிப்பவர்கள் நாங்கள்'' என கூறிய பிரதமர் மோடி, 

''இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.'' 

எனும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.