எரிவாயு பயன்பாட்டை கட்டுப்படுத்த உடன்பாடு

எரிவாயு பயன்பாட்டை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி அமைச்சர்கள் உடன்பாடு

by Bella Dalima 26-07-2022 | 8:31 PM

எரிவாயு பயன்பாட்டை தமது நாடுகளில் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தலாமென்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை எரிவாயு பயன்பாட்டை 15 வீதத்தால் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் உடன்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன், இந்த குளிர் காலத்தில் இயற்கை எரிவாயுவிற்கான கேள்வியை 15 வீதத்தால் சுயமாகக் குறைக்கும் அரசியல் உடன்படிக்கையொன்று உறுப்பு நாடுகளுக்கிடையே இன்று எட்டப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவினால் எரிவாயு விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனால், வரவுள்ள குளிர் காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.