கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாவது வருட நினைவு தினம்

by Staff Writer 25-07-2022 | 8:35 PM
Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்(25). அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நேற்றும்(24) இன்றும்(25) மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பிரேபுரூக் பிளேஸில் உள்ள MTV தலைமையகத்தில் மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் ஆற்றிய சமூக, கலாசார மற்றும் சமயப் பணி தொடர்பில் மகாசங்கத்தினர் இதன்போது பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே, அன்னாரின் முதலாவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் இன்று(25) மாலை ஆராதனையொன்று நடைபெற்றது. இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நேற்றிரவு(24) பிரித் பாராயணம் செய்யப்பட்டதுடன் இன்று(25) காலை மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது. தெபானம கலையதக்தில் நேற்றிரவு(24) தர்ம போதனை நடைபெற்றதுடன் இன்று(25) காலை தானம் வழங்கப்பட்டது. கெப்பிட்டல் மகாராஜா குழுமத்திற்கு சொந்தமான ICL நிறுவனத்திலும் இன்று(25) தானம் வழங்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிலையில், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த முன்னாள் தலைவர், அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று(25) ஆத்ம சாந்தி வழிபாடுகள் நடைபெற்றன. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நடைபெற்றன. பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் ஆலயத்தில் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றது. பஞ்ச ஈஞ்சரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிகாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாத சுவாமி ஆலயத்தில் மோட்ச பூஜையொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னைநாதர் ஐயப்பா சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக அக்கரப்பத்தனை வலம்புரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்  விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வலம்புரி கலை கலாசார அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதனையடுத்து, நுவரெலியா லோவ கிரன்லி தமிழ் வித்தியாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றது. பாடசாலையின் உப  அதிபர்,  நுவரெலியா கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு இதன்போது கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு புஸ்ஸல்லாவ ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. புஸ்ஸல்லாவ நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் இன்று(25) விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கொழும்பு - கிருலப்பனை ஜூம்மா பள்ளிவாசலில் மரமொன்று நாட்டி வைக்கப்பட்டது. நியூஸ்பெஸ்ட்டின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதனையடுத்து சிலருக்கு  வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பாறை - நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் அஷ்ஷேய்க் இப்றாகிம் மௌலவி தலைமையில் விசேட துஆப் பிராத்தனையொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.