by Staff Writer 25-07-2022 | 9:10 PM
Colombo (News 1st) இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு (Droupadi Murmu) இன்று(25) பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்றத்தில் காலை10.15 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் புதிய குடியரசு தலைவர் பதவியேற்றார்.
இதனையடுத்து, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அங்கு உரையாற்றிய புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வழிகாட்டியாக இருப்பேன் என உறுதியளித்தார்.
தமது இந்த வெற்றி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சாமானிய மக்களின் கனவும் நிறைவேறும் என்பதற்கு தாம் ஒரு உதாரணம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் திரௌபதி முர்மு கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்த்தரப்பு வேட்பாளராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவை 02 இலட்சத்து 96 ஆயிரத்து 626 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த திரௌபதி முர்மு, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இதனூடாக இந்தியாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவராக 64 வயதான திரௌபதி முர்மு பதிவாகியுள்ளார்.
அத்துடன் அந்நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஜூன் 20, 1958ஆம் ஆண்டில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் திரௌபதி முர்மு பிறந்தார்.
சந்தால் பழங்குடியைச் சேர்ந்த முர்மு ஆசிரியராக பணியாற்றிய நிலையில் 1997ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் தடம் பதித்தார்.
1997ஆம் ஆண்டு நடந்த ராய்ரங்பூர் பஞ்சாயத்து தேர்தலில் முதல்தடவையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின்னர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களை உறுப்பினரானார்.
2000 முதல் 2002 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றிவர் பின்னர், 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
திரௌபதி முர்முவின் சிறப்பான செயல்பாடுகளுக்காக, 2007ஆம் ஆண்டு சிறந்த ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினருக்கான நீலகந்தா விருது வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஆளுநர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.