தலைமன்னாரில் கைதான மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஷ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் 

by Staff Writer 23-07-2022 | 4:57 PM

இந்தியா: தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஷ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் 700-க்கும் மேற்பட்ட இராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. 

நேற்றிரவு நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் நாளொன்றுக்கு 05 கோடி இந்திய ரூபாவிற்கும் அதிக வருமான இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. 

எனவே, மீனவர்களின் விடுதலை தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஷ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 06 பேரும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஆறு பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, இந்திய மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.