உக்ரைனிலிருந்து உலக சந்தைக்கு மீண்டும் தானியங்கள் ஏற்றுமதி; ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து 

by Bella Dalima 23-07-2022 | 6:07 PM
இஸ்தான்புல்: உக்ரைனிலிருந்து உலக சந்தைக்கு தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று (22) கையொப்பமிட்டுள்ளன. ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கையொப்பமானது. இதையடுத்து, கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்களை மீண்டும் திறக்கவும் உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயத்திலிருந்து உலக நாடுகளை பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இஸ்தான்புலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டரெஸ்,  துருக்கி அதிபா் எர்டோகன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனா். ஒப்பந்தத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரும் உக்ரைனின் உட்கட்டமைப்புத்துறை அமைச்சரும் கையொப்பமிட்டனா். கடந்த 5 மாதங்களாக தங்கள் நாட்டில் ரஷ்யா போா் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒரே ஒப்பந்தத்தில் கையொப்பமிட தங்களுக்கு விருப்பமில்லை என உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தனா். அதன் காரணமாக, ஒரே மாதிரியான ஒப்பந்தத்தில் வெவ்வேறு பிரதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தனித்தனியாக கையொப்பமிட்டனா். ஒப்பந்த அம்சங்கள்...
  • உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பார்வையிடுவாா்கள்
  • கருங்கடலில் அந்த கப்பல் கண்ணிவெடிகளில் சிக்காமல் செல்ல உக்ரைனின் முதன்மை கப்பல் வழிகாட்டும்.
  • கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக தானிய கப்பல்கள் செலுத்தப்படும். அந்த கப்பல்களை ஐ.நா., ரஷ்யா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு கண்காணிக்கும்.
  • உக்ரைன் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் ஆயுதங்கள் உள்ளனவா என்பதை அந்த கூட்டுக் குழு ஆய்வு செய்யும்.
  • தானிய போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல் வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும் உக்ரைனும் உறுதியளித்துள்ளன.
நேற்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும், இன்று உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த ஒடெஸா துறைமுகத்தில் தொடர் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. துறைமுக நகராகிய ஒடெஸாவை இன்று காலை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் ரஷ்யா மீது குற்றஞ்சுமத்தியுள்ள உக்ரைனின் விமானப்படைத் தளபதி, குறித்த துறைமுகத்திலுள்ள தானியக்களஞ்சியங்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதாகவும் சாடியுள்ளார். தானிய ஏற்றுமதியை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதியளிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையொன்றில் இரு நாடுகளும் கைச்சாத்திட்ட மறுதினமே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.