.webp)
Colombo (News 1st) காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திக்கு 'அரச எதிர்ப்பு போராட்ட முகாமை சுற்றிவளைத்த இராணுவம்' என BBC செய்திச்சேவை தலைப்பிட்டுள்ளது.
அங்கு செய்தி அறிக்கையிட சென்ற BBC ஊடகவியலாளர் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தொலைபேசி பறிக்கப்பட்டு அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
'இலங்கையின் போராட்ட முகாம்களில் இராணுவ சுற்றிவளைப்பு, தலைவர்கள் கைது' என Al Jazeera செய்தி வௌியிட்டுள்ளது.
போராட்டக்கார்களை மிலேச்சத்தனமாக தாக்கிய இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கூடாரங்களை அழித்த இராணுவத்தினர் போராட்டக்களத்தில் இருந்த போராட்டக்கள தலைவர்கள் சிலரை கைது செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு வௌியே அமைக்கப்பட்டிருந்த போராட்ட முகாமை இராணுவத்தினர் அகற்றியதாக CNN செய்தி வௌியிட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில் அரச காணியை கைப்பற்றி அமைக்கப்பட்டிருந்த போராட்ட முகாமை வௌ்ளிக்கிழமை அதிகாலை சுற்றிவளைத்த இலங்கையின் இராணுவத்தினர் அதன் ஒரு பகுதியை அகற்றியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.