.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்து, உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகள் இருப்பின் அவற்றை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0718 594 950 என்ற WhatsApp இலக்கத்திற்கு அவற்றை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது சிலர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு தீ வைத்திருந்தனர். அது தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, கடந்த 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே இன்று மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்பட்டு குறித்த அதிகாரி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.