ஜனாதிபதியானார் ரணில்; வர்த்தமானி வௌியீடு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க; வர்த்தமானி வௌியீடு

by Bella Dalima 20-07-2022 | 9:42 PM
Colombo (News 1st) எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளதாக அறிவித்து இன்று வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இந்த வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. பாராளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  ஆரம்பமானது. சபாநாயகருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதால், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாக்கெடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க , ஶ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார  திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக  போட்டியிட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டபோதிலும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. சமன்பிரிய ஹேரத், டி.வீரசிங்க ஆகியோர் சுகயீனமுற்றிருந்த நிலையிலும் இன்று வாக்களிப்பில் கலந்துகொண்டனர். வாக்குகள் எண்ணப்பட்ட போது, அதனை மேற்பார்வை செய்வதற்கு வேட்பாளர்கள் சார்பில் மூவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிலையில், அளிக்கப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டன. இந்த இரகசிய வாக்கெடுப்பில் 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்ததுடன், டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்கவிற்கு 03 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து, கருத்துத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, சகல கட்சியினருடனும் இணைந்து நாட்டை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார். அதற்காக தம்முடன் ஏனைய கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி எஸ்மண்ட் விக்ரமசிங்க , நளினி விக்ரமசிங்க தம்பதிகளின் இரண்டாவது புதல்வராக பிறந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர், பின்னர் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் வெற்றியீட்டி முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் முக்கிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டதுடன், ஜனாதிபதி J.R.ஜயவர்தனவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த வயது குறைந்த அமைச்சராக திகழ்ந்தார். கல்வி, இளைஞர் விவகாரம், தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சுப் பதவியை வகித்த ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவைகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலையங்களை ஸ்தாபிப்பதில் முன்னோடியாக செயற்பட்டார். கல்வியற்கல்லூரிகளை ஸ்தாபிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1994 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 6 தடவைகள் இலங்கையின் பிரதமராக செயற்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, சுமார் 17 வருடங்களாக அவ்வப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சபை முதல்வராகவும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் செயற்பட்டிருந்தார்.