புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Jul, 2022 | 12:49 pm

Colombo (News 1st) புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

223 பேர் வாக்களித்திருந்த நிலையில், அவற்றில் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகிய இருவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று(20) வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக அப்போதைய பிரதமராகவிருந்த D.B.விஜேதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதியாக தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்