தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அறிமுகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அறிமுகம்

by Bella Dalima 16-07-2022 | 4:19 PM
Colombo (News 1st) 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள டீசலின் மாதிரி பரிசோதிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அவர் இதனை கூறியுள்ளார். ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன Chassis இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேசிய அடையாள அட்டைக்கு, ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் வகையில் தேசிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதற்காக fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தினூடாக இன்று முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.