ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் BASL அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

by Bella Dalima 15-07-2022 | 6:24 PM
Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் குறித்தான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை என அதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோர் அதில் கையொப்பம் இட்டிருக்கின்றார்கள். இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு பொறிமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், விரைவாக செயற்படுமாறு அனைத்து கட்சித் தலைவர்களிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடு சமூக, அரசியல், பொருளாதார ஸ்திரமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி நபரதோ அல்லது அரசியல் கட்சியினதோ தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களையன்றி நாட்டின் நலன்களை முன்னிறுத்தி தீர்மானங்களை மேற்கொள்வதே காலத்தின் தேவை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.