வௌிநாடு பயணிக்கப்போவதில்லை:மஹிந்த, பசில் அறிவிப்பு

நாளை (15) வரை வௌிநாடுகளுக்கு பயணிக்கப் போவதில்லை: மஹிந்தவும் பசிலும் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

by Bella Dalima 14-07-2022 | 3:46 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் S.R. ஆட்டிகல ஆகியோர் நாளை (15) வரை வௌிநாடுகளுக்கு பயணிக்கப் போவதில்லை என உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுவின் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளூடாக இதற்கான உறுதிமொழி சமர்ப்பிக்கப்பட்டது. மனுவின் மற்றுமொரு பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் W.D.லக்‌ஷ்மன் சார்பில் சட்டத்தரணி மன்றில் ஆஜராகாமையால், அவருக்கும் நாளை வரை வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி, இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.