by Staff Writer 13-07-2022 | 6:48 PM
கோட்டாபய ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகுவதன் ஊடாகவே நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர முடியுமென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம், அரசியலமைப்பிற்கு இடமளித்து கோட்டாபய ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி தற்போது வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்திவரும் நிலையில் பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவதன் மூலமாகவே நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியுமென முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வௌியிட்ட விசேட அறிவிப்பின் பின்னரே பாதுகாப்பு தரப்பினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்குமிடையில் மோதல் நிலை உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.