by Staff Writer 13-07-2022 | 6:21 PM
கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க எனும் இருவர் தொடர்பில் சிந்திக்காமல் நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்கள் தொடர்பில் சிந்திக்குமாறு முப்படையினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் விசேட உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிராயுதபாணியான மக்கள் மீது அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் பிரயோகிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது அநீதியாக அடக்குமுறையை பிரயோகித்து மிலேச்சத்தனமாக குரூர தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கோஷமாகவுள்ளதெனவும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவை கேட்கவில்லையா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அரச, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டாமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது விசேட உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.