லிட்ரோவின் தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல்

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு கொள்வனவு தீர்மானத்திற்கு இடைக்கால தடை கோரி எழுத்தாணை மனு தாக்கல்

by Staff Writer 12-07-2022 | 5:52 PM
Colombo (News 1st) ஒரு மெட்ரிக் தொன் LP எரிவாயுவை 129 டொலருக்கு கொள்வனவு செய்ய லிட்ரோ நிறுவனம் ஏற்படுத்திக்கொண்டுள்ள தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாகானந்த கொடித்துவக்கினால் இந்த எழுத்தாணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம், அதன் தலைவர் முதித பீரிஸ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் ஆலோசகரான சாகல ரத்நாயக்க, Siam Gas Trading நிறுவனம், Active Oil Industries Suppliers உள்ளிட்ட 08 பேர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் LP எரிவாயுவிற்கான நெருக்கடியை கருத்திற்கொண்டு, உடனடி கொள்வனவிற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் உட்பட ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 96 அமெரிக்க டொலர் வீதம் 2,80,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வழங்குவதற்கு Siam Gas Trading இணக்கம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கும் போது, குறித்த கொள்வனவை இரத்து செய்து, ஒரு மெட்ரிக் தொன் LP எரிவாயுவை Active Oil Industries Suppliers எனும் நிறுவனத்திடமிருந்து 129 டொலருக்கு கொள்வனவு செய்ய உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனூடாக மக்களின் பெருந்தொகை பணம் வீணாகும் என்பதோடு, முதித பீரிஸ், ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகிய பிரதிவாதிகள் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஒரு மெட்ரிக் தொன் LP எரிவாயுவை 129 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை செல்லுபடியற்றதாக்கி ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார். அத்துடன், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குறைந்த விலையின் கீழான, எரிவாயு கொள்வனவை முன்னெடுக்குமாறு மற்றுமொரு உத்தரவை பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.