நால்வருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு மனு

மஹிந்த, பசில், கப்ரால், W.D.லக்ஷ்மனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு நகர்த்தல் பத்திரம் தாக்கல்

by Bella Dalima 12-07-2022 | 4:27 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வௌிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு கோரி, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுடன் இந்த நகர்த்தல் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படை உரிமை மனுவானது உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக நகர்த்தல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் இருப்பிடத்தைக் கூட பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சிலர் நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்கு தயாராகின்றமை தொடர்பில் வௌிக்கொணரப்பட்டுள்ளதாகவும் நகர்த்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியனான ஜூலியன் போலிங், ஜெஹான் கனகரத்ன மற்றும் Transparency International Sri Lanka நிறுவனம் இணைந்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளன.