பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் ஔிப்படம்

பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் ஔிப்படம்; வரலாற்று முக்கியத்துவம் பெற காரணம் என்ன?

by Bella Dalima 12-07-2022 | 5:08 PM
Colombo (News 1st) பேரண்டத்தின் ஆரம்ப பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு ஔிப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் James Webb விண்வெளி தொலைநோக்கி. மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளை கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பியுள்ளது James Webb. பூமியில் இருந்து 10 இலட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு வெளியிட்டார். பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறியுள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த தொலைநோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி விண்ணில் ஏவியது. 'விண்வெளியில் உள்ள புவியின் கண்' என்று வர்ணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், James Webb அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 10 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் James Webb தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி பேரண்டத்தை காட்சிப்படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பது தான் James Webb தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா. பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்த பேரண்டம் உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள். பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது, பேரண்டத்தின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் James Webb தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது. இதை விட சுவாரஷ்யம், இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற விபரம் தான். ஔிப்படத்தில் உள்ள ஒவ்வொரு ஒளிப்புள்ளியும் ஒரு உடுத்திரள் (Galaxy) ஆகும். நட்சத்திரங்களை தமிழில் உடு என்று அழைக்கிறோம். உடுக்கள் கூட்டமாக இருப்பதே உடுத்திரள். நமது சூரியன் இடம் பெற்றுள்ள உடுத்திரளின் பெயர்தான் பால்வெளி மண்டலம். James Webb வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் காட்டுவது SMACS 0723 என்று பெயரிடப்பட்ட ஒரு உடுத்திரள் கூட்டம் தான். உண்மையில் இந்த உடுத்திரள் கூட்டம் 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காட்சியைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. ஆனால், இந்த உடுத்திரள் கூட்டம் பின்னணியில் அதைத்தாண்டி நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரள்களின் ஒளியை வளைத்தும் பெரிதுபடுத்தியும் காட்டுகிறது. இதற்கு ஈர்ப்பு விளைவு என்று பெயர். நமது சாதாரண கெமராவில் Zoom Lens எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக்காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத்திரள்களின் ஒளி விண்வெளி தொலைநோக்கிக்கு Zoom Lens போல செயற்பட்டு அதை விட நெடுந்தொலைவில் உள்ள காட்சியை காண உதவி செய்வதே ஈர்ப்பு விளைவு எனப்படுகிறது. இப்படி இந்த ஈர்ப்பு விளைவின் உதவியோடு James Webb தொலைநோக்கி எடுத்த இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள, மிக நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரளின் ஒளி, இந்தப் பேரண்டம் தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது பிறந்தது ஆகும். அதாவது பேரண்டம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது இந்த உடுத்திரள் எப்படி இருந்தது என்பதை இது காட்டுகிறது. இந்த தொலைவு என்பது இதுவரை காட்சிப்படுத்தப்படாத தொலைவு என்பது தான் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறக் காரணம்.   James Webb Telescope