ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Jul, 2022 | 6:45 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S.கணுகல குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்