News1st ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: HRC விசாரணை

News 1st ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: விசாரணையை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

by Staff Writer 11-07-2022 | 5:33 PM
Colombo (News 1st) News 1st ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தமது அதிகாரிகள் குழு வைத்தியசாலைக்கு சென்று தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே குறித்த இடத்திற்கு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டமை மற்றும் யாருடைய பணிப்புரை, கண்காணிப்பின் கீழ் அவர் செயற்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.