ஆஸிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

by Staff Writer 11-07-2022 | 6:18 PM
Colombo (News 1st) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் தடவையாக இன்னிங்ஸ் வெற்றியை இலங்கை அணி இன்று(11) பதிவு செய்தது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் அரங்கில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக தினேஷ் சந்திமால் கிரிக்கெட் வரலாற்றில் பதிவானார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார். இந்த ஆற்றலின் மூலம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் எதிர்பார்ப்பில் இருந்த அவுஸ்ரேலிய அணிக்கு ஏமாற்றமளித்து இலங்கை அணி டெஸ்ட் தொடரைச் சமப்படுத்தியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 364 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை அணி சார்பாக 9 மணித்தியாலங்களுக்கும் மேலாக களத்தில் நின்ற தினேஷ் சந்திமால், 5 சிக்சர்கள் 16 பவுண்ட்ரிகளுடன் 206 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இலங்கை அணி 554 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்வெப்ஸன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவை விட 190 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 190 ஓட்டங்களைக் கடக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவுஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது. இன்று(11) போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் என்பதால் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக விளையாடி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவுஸ்திரேலியாவின் சகல எதிர்பார்ப்புகளையும் சிதறடித்த பிரபாத் ஜயசூரிய, 16 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். மானஸ் லபுசேன் பெற்ற 32 ஓட்டங்களே அவுஸ்திரேலிய அணி வீரர் ஒருவர் இரண்டாம் இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 151 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. அறிமுக வீரரான பிரபாத் ஜயசூரிய போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானதுடன், தொடரின் சிறந்த வீரருக்கான விருது தினேஷ் சந்திமால் வசமானது.