ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்

மக்களின் ஆணைக்கு அடிபணிந்து ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

by Bella Dalima 09-07-2022 | 6:17 PM
Colombo (News 1st) ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் ஆணைக்கு அடிபணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக மக்களை அடக்குமுறையில் ஆழ்த்திய அரசாங்கம், தவறுகளை திருத்தி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய தீர்மானத்தை உடனடியாக எடுக்காததால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகமும் ஜனாதிபதி மாளிகையும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்பதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அப்பதவியை வகிக்க மக்களின் ஆணை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக ஸ்தாபிக்கப்படுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென்பதே ​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைபாடு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதுடன், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்து பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.