by Bella Dalima 09-07-2022 | 6:07 PM
Colombo (News 1st) சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து, பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதுவரை பிரதமர் பதவியில் நீடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும் சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் குறுகிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் எனவும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வார காலத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டி, சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.