அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட மக்கள்; ஜனாதிபதி மாளிகை முற்றுகை

by Bella Dalima 09-07-2022 | 1:59 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்து பெரும் திரளான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர். கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மக்கள் திரண்டு வந்து பாதுகாப்பு வேலிகளை கடந்து சென்றனர். ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை தடுக்க பாதுகாப்பு தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். எனினும், சகல தடைகளையும் கடந்து பொதுமக்கள் Go Home Gota கோஷத்துடன் ஜனாதிபதி மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டனர். நேற்றிரவு 9 மணியளவில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், இன்று காலை 8 மணியுடன் பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரின் கையொப்பத்துடன் அறிவித்தல் விடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், நேற்றிரவே கண்டி, அனுராதபுரம் மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களின் மக்கள் ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு கொழும்பு ரயிலை இயக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெரும் திரளான மக்களின் வலியுறுத்தலுக்கு மத்தியில், ரயில் நிலைய அதிபர்கள் ரயிலை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து கண்டி, மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி போராட்டக்காரர்களுடன் ரயில்கள் புறப்பட்டன. மாத்தறை ரயில் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்பு நோக்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு வந்துகொண்டிருக்கின்றனர். இதேவேளை, காலியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் காலி கோட்டையில் மக்கள் திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை தெரிவித்த வண்ணமிருக்கின்றனர். இதனிடையே, சர்வ மதத் தலைவர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக புறக்கோட்டை போதிக்கு அருகில் தேரர்கள் ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. ராகம பெசிலிக்கா தேவாலயத்திலிருந்தும் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, கெஸ்பேவ பகுதியிலிருந்தும் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படுகின்றது. பிலியந்தலை ஊடாக இவர்கள் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர். கிரிபத்கொட பகுதியிலிருந்தும் மக்கள் கண்டி வீதியூடாக கொழும்பில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த வண்ணமுள்ளனர். சட்டத்தரணிகள், புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹட்டன் நகரில் இன்று இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை. செத்தம் வீதியிலிருந்து வருகை தந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பல தடவைகள் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதிகளில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகைளயும் மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச்சென்று ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை அடைந்துள்ளனர். ஏராளமான பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், போராட்டக்காரர்கள் சளைக்காது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கொழும்பு ஜனாதிபதி செயலகம் வரை தமது பேரணியை முன்னெடுத்துள்ளனர். மருதானை எல்பின்ஸ்டன் கட்டடத்திற்கு அருகில் கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணி, தற்போது கொழும்பை அண்மித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்று காலை பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்தை விரட்டியடிப்போம், முறைமையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் களணி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மத்திய பஸ் நிலையம் வரை சைக்கிளில் பேரணியாக சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கையொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு கண்டனம் தெரிவித்தும், கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வவுனியா நகரில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு, வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது. கொழும்பு கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்திலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 'கோட்டா ரணில் அரசாங்கத்ததை கவிழ்ப்போம்' எனும் தொனிப்பொருளில், திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. திருகோணமலை அபயபுர சந்தியில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் திருகோணமலை - சேருநுவர பகுதியில் இன்று மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சேருநுவர பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சேருநுவர நகரில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சேருநுவர மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - கிரான்குளத்தில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கோட்டா, ரணில் கூட்டு சதியை முறியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.