பருத்தித்துறை கடலில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுதலை

by Bella Dalima 08-07-2022 | 5:01 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் கிருஷாந்த் பொன்னுத்துறை முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகினையும் கடற்றொழில் உபகரணங்களையும் அரசுடைமையாக்குவதற்கு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 19 சான்றுப்பொருட்கள் கடற்றொழில் திணைக்களத்தினால் இன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று முதல் 9 வரையான சான்றுப்பொருட்களையும் 18 ஆவது சான்றுப்பொருளையும் அரசுடைமையாக்குவதற்கு நீதவான் உத்தவிட்டுள்ளார். 10 முதல் 17 வரையான சான்றுப்பொருட்களான மீனவர்களின் தனிப்பட்ட பொருட்களை மீனவர்களிடம் மீள கையளிக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களுக்கான தற்காலிக கடவுச்சீட்டை பெறுவதற்கும் அதற்கான நிழற்படம் மற்றும் கைவிரல் அடையாளங்களை பெறுவதற்கும் மீனவர்களை மிரிஹான தடுப்பு முகாமிற்கு அழைத்துச்செல்லவும் அனுமதி வழங்குமாறு இந்திய துணை தூதரகம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். விடயங்களை ஆராய்த நீதவான், இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த 3 ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கடற்றொழில் பணிப்பாளரின் அனுமதியின்றி அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டமை, வலைகளை தொடக்கறுக்காமை மற்றும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள இழுவை மடி வலைகளை பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்