மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம்

by Bella Dalima 07-07-2022 | 8:30 PM
Colombo (News 1st) ''பொய்யை தோற்கடிப்போம் நீதியை நிலைநாட்டுவோம்'' எனும் தொனிப்பொருளில் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் புறக்கோட்டை போதிக்கு முன்பாக இன்று (07) சத்தியாகிரகத்தை ஆரம்பித்தனர். சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்த தரப்பினர், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில வீதிகளுக்குள் இன்று பிரவேசிப்பதை தடுக்கும் வகையில், பொலிஸார் நேற்று நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தனர். நீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவை சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பொலிஸார் கையளிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், தேரர்கள் அதனை நிராகரித்தனர். ஜனாதிபதி ஆசனத்தில் நந்தசேன ராஜபக்ஸவை அமர்த்திய மகா சங்கத்தினரே அவரை கதிரையில் இருந்து வௌியேற்றுவார்கள் என இதன்போது பிக்கு அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டார். வீதியில் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுக்காதவராக ஜனாதிபதி தமது மாளிகைக்குள் இருப்பதாக பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் கூறினார். ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை வீடு செல்லுமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து, புத்திஜீவிகள் சபையை உருவாக்கி, 15 அமைச்சர்களை நியமித்து, ஆறு மாதங்கள் நாட்டை நிர்வகித்ததன் பின்னர் பொதுத்தேர்தலுக்கு சென்று சேவை செய்ய முடிந்த ஒருவருக்கு நாட்டை ஒப்படைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் சுட்டிக்காட்டினார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.