by Bella Dalima 07-07-2022 | 4:23 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தடையாக இருக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் குறித்து தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோதே கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எப்போதும் ஒத்துழைப்பதாகவும் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
சர்வகட்சி அராசாங்கம் தொடர்பில் நடைபெறும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு அவதானித்து வருவதாகவும் அது குறித்து கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பொருளாதார பிரச்சினை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் தேசிய பிரச்சினை எனவும், அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
எனவே, தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் ஒத்துழைக்க தயார் எனவும் உண்மையை உணர்ந்து தமிழ் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.