ஜூலை 9 எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் தௌிவூட்டல்

ஜூலை 9 நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் தௌிவூட்டல்

by Bella Dalima 07-07-2022 | 3:29 PM
Colombo (News 1st) எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் பல பகுதிகளில் இன்று பேரணி, சத்தியாகிரகம், கருத்தரங்கு என்பன நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கொழும்பில் இன்று கரத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். இதற்கு முன்னதாக இன்று முற்பகல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 9 ஆம் திகதி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் வகையில் துவிச்சக்கரவண்டி பவனி ஒன்றையும் நடத்தினர். இதேவேளை, சர்வமத தலைவர்கள் தலைமையில் வத்தளையிலிருந்து கொழும்பை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர். கொழும்பு கோட்டையில் பிக்குகள் ஒன்றியம் சத்தியாகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதில் அதிகளவிலான பிக்குகள் கலந்துகொண்டுள்ளனர். அம்பலாந்தோட்டையிலும் இன்று பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தினர். இதேவேளை, வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழயிர்கள் ஒன்றிணைந்து கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஜனாதிபதியும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.