பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2022 | 5:27 pm

Colombo (News 1st) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவரது அமைச்சரவையில் இருந்து 40 அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து, அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்கிற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், போரிஸ் ஜான்சன் மன்னிப்புக் கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் உள்ளான நிலையில், அவருக்கு நெருக்கடி முற்றியது.

இதன் காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் (Sajid Javid) ஆகியோர் நேற்று மாலை பதவி விலகினர்.

போரிஸ் ஜான்சனைக் கண்டித்து அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர்.

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் பதவியையும் அவர் இராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்