சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் சஜித் தலைமையில் பேச்சுவார்த்தை 

by Bella Dalima 06-07-2022 | 8:23 PM
Colombo (News 1st) விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, அதன் பங்காளிக் கட்சிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி , தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலான 9 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சட்டப்பூர்வமான சர்வகட்சி அரசாங்கமொன்றை விரைவில் ஸ்தாபிக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்க்கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அரசியல் குழுவொன்றையும் பொருளாதார குழுவொன்றையும் நியமிப்பதற்கு இன்று தீர்மானம் எடுக்கப்பட்டது.