பேரழிவிற்கு பொறுப்பேற்று ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும்: கொழும்பு பேராயர் வலியுறுத்தல்

by Staff Writer 05-07-2022 | 6:03 PM
Colombo (News 1st) தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான ஒழுக்க ரீதியான உரிமை இன்மையால், நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைக்கான பொறுப்பை ஏற்று, ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். பதவியை இராஜினாமா செய்து, நாட்டின் எதிர்காலத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு அறிக்கை ஒன்றினூடாக கொழும்பு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் மதத் தலைவர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்பதால், நாட்டு மக்களுக்காக இந்த கோரிக்கையை விடுக்க தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான நெருக்கடி மற்றும் அசௌகரியமான சூழ்நிலைக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியது ஜனாதிபதியும், கடந்த இரண்டரை வருடங்களாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட குறுகிய மனபாங்குடனான சர்ச்சைக்குரிய தீர்மானங்களுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கூறியுள்ளார். முழு நாட்டு மக்களினதும் நம்பிக்கையை இழந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது, கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாரிய தடையாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் முறையான மாற்றத்தை, நம்பிக்கை மற்றும் வௌிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்கு சர்வ கட்சியுடனான இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என கூறியுள்ள பேராயர், மக்களின் கருத்துக்கணிப்பினூடாக பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்