by Staff Writer 04-07-2022 | 7:20 PM
மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்களில் இன்று (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.
ஒரு நாள் சேவை தற்போது கொழும்பிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.
திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்ததன் பின்னர் இன்று முதல் வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி தெரிவித்தார்.
ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளாந்தம் 3000 பேர் கொழும்பிற்கு வரகை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் கன்சியூலர் அலுவலகங்கள் திறக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய கன்சியூலர் அலுவலகங்களும் திறக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.