கடற்பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாமென அறிவிப்பு

கொழும்பு முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாமென அறிவிப்பு

by Bella Dalima 02-07-2022 | 10:39 PM
Colombo (News 1st) கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், குறித்த கடற்பிராந்தியங்களில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படலாமெ​னவும் கடல் அலை 3.5 மீட்டர் வரை மேலெழக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, காலி சமுத்ர மாவத்தை பகுதியில் கடல் அலை கரையைக் கடந்து வந்தமையால் குறித்த வீதியில் இன்று மாலை மணல் நிறைந்து காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்ட மீன்பிடி படகொன்றும் வீதி வரை அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதனால் காலி - மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதனிடையே, மாரவில, துடுவ பகுதியிலும் கடல் அலை கரையைத் தாண்டி வந்துள்ளது.