வைத்தியர்களுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்

இராணுவ முகாம்களில் வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம் 

by Bella Dalima 02-07-2022 | 5:18 PM
Colombo (News 1st) அருகில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியும் அதற்கு இணக்கம் தெரிவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ஏற்படும் அமைதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறிகள், பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நுவரெலியா, கெப்பிட்டிபொல, தம்புளை, தம்புத்தேகம, மீகொட பொருளாதார மையங்களுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களிலிருந்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளூடாக தனியார் பஸ்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் சுற்றுலா பஸ்களுக்கான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்